RR vs DC IPL 2024 : டெல்லி வெற்றி..! ஆர்ஆர் 2வது இடம் - சஞ்சு சாம்சன் அப்செட்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

1 /7

ஐபிஎல் 2024 தொடரின் 56வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டலஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டதடத்த உறுதி செய்திருந்தாலும், இப்போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் டெல்லி அணியும் களமிறங்கின. டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

2 /7

டெல்லி அணியில் இளம் வீரர்களான அபிஷேக் போரல், ஜேக் பிரேசர் மெக்குர்க் களமிறங்கினர். எதிர்பார்த்தைப் போலவே இருவரும் அதிரடி தொடக்கத்தை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கொடுத்தனர். குறிப்பாக ஜேக் பிரேசர் மெக்குர்க் பேட்டில் பட்ட பந்துகள் எல்லாம் பவுண்டரி, சிக்சர்களாக பறந்தன. அவரை ஆட்டமிழக்க என்ன செய்வது என ஆர்ஆர் கேப்டன் சஞ்சு சாம்சன் யோசிப்பதற்குள் 22 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார் மெக்குர்க்.   

3 /7

மொத்தம் 3 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் விளாசியிருந்த நிலையில், துருப்புச்சீட்டு அஸ்வின் பந்துவீச வந்தார். அவர் வந்ததும் மெக்குர்க் கேட்ச் என்ற முறையில் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அபிஷேக் போரல் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார்.  மெக்குர்க் விளாசியதைப் போலவே அதிரடி காட்டிய அபிஷேக் போரல் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசி 36 பந்துகளில் 65 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதனால் டெல்லி அணி 9 ஓவர்களில் 110 ரன்களும், 14 ஓவர்களில் 150 ரன்களும் விளாசியிருந்தது.   

4 /7

ஆனால் அதன்பிறகு வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாததால் ஆரம்பத்தில் வந்த 12 என்ற ரன்ரேட் மெல்ல குறைந்தது. இறுதிக் கட்டத்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடி காட்டினார்.  ஸ்டப்ஸ் 20 பந்துகளில் 41 ரன்கள் விளாசி அவுட்டானார். இதில் 3 சிக்சர், 3 பவுண்டரிகள் விளாசினார் ஸ்டப்ஸ். 20 ஓவர் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் அஸ்வின் மட்டும் சிறப்பாக பந்துவீசி 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாஹல், சர்மா, போல்ட் தலா 1 விக்கெட்டு வீழ்த்தினர்.   

5 /7

இதனையடுத்து சேஸிங் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அந்த அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 46 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகளும் அடங்கும். அவருக்கு அடுத்தபடியாக ரியான் பராக் 27 ரன்களும், ஷூபம் துபே 25 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் கலீல், குல்தீப், முகேஷ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.  

6 /7

இப்போட்டி வெற்றிக்குப் பிறகு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஐபிஎல் 2024ல் பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது. இப்போது அந்த அணி பாயிண்ட்ஸ் டேபிளில் 5வது இடத்தில் உள்ளது. 12 போட்டிகளில் ஆடியிருக்கும் டெல்லி இதுவரை 6 போட்டிகளில் வென்றுள்ளது. அதேநேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.   

7 /7

இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 86 ரன்களில் அவுட்டானார். அவரது அவுட் சர்ச்சையானது. சிக்சர் லைனில் பிடிக்கப்பட்ட கேட்ச் சந்தேகமாக இருந்த நிலையில், சஞ்சு சாம்சன் களத்தில் இருந்து நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். இருப்பினும் அவுட் கொடுக்கப்பட்டதால் சஞ்சு சாம்சன் அப்செட்டானார்.