குஜராத்துக்கு ஷாக் கொடுத்த ஷஷாங்க் சிங்... ஏலத்தில் பஞ்சாப் எடுத்த தவறான வீரர் - ஞாபகம் இருக்கா

GT vs PBKS Highlights: குஜராத் அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில் ஷஷாங்க் சிங்கின் (Shashank Singh) அதிரடியால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. அந்த வகையில், பஞ்சாப்புக்கு வெற்றியை கொடுத்த ஷஷாங்க் சிங் யார் என்பதை இதில் காணலாம். 

  • Apr 05, 2024, 00:02 AM IST

பஞ்சாப் அணி 19.5 ஓவர்களிலேயே இலக்கை சேஸ் செய்து 1 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. 

 

 

 

 

1 /7

நடப்பு ஐபிஎல் தொடரின் 17ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் சிக்கந்தர் ராஸா உள்ளே வந்த நிலையில், குஜராத் அணியில் கேன் வில்லியம்சனுக்கும் இன்று வாய்ப்பு கிடைத்தது.   

2 /7

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 199 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக சுப்மான் கில் 89 ரன்களை எடுத்தார். ரபாடா 2 விக்கெட்டுகளையும், ஹர்ப்ரீத் பிரார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.   

3 /7

200 ரன்கள் சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சரியான தொடக்கம் அமையவில்லை. தவாண் 1 ரன்னில் ஆட்டமிழக்க பேர்ஸ்டோவ் 22 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 35 ரன்களையும் அடித்து பவர்பிளேவில் நல்ல ஸ்கோர் வர உதவினர். 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 54 ரன்களை பஞ்சாப் பவர்பிளே முடிவில் எடுத்திருந்தது. 

4 /7

ஆனால் ஒருகட்டத்தில் சாம் கரன், சிக்கந்தர் ராஸா ஆகியோர் ஆட்டமிழக்க பஞ்சாப் 12.2 பந்துகளில் 115 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதற்கு முன்னரே ஷஷாங்க் சிங் களத்திற்கு வந்து அதிரடியை தொடங்கிவிட்டார். ஜித்தேஷ் சர்மா ரஷித் கான் பந்துவீச்சில் தொடர்ந்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் புகுந்த அஷுடோஷ் ஷர்மாவும், ஷஷாங்க் சிங் உடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  

5 /7

இதனால், கடைசி 5 ஓவர்களுக்கு 62 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷஷாங்க் சிங், அஷுடோஷ் ஷர்மா அதிரடியால் கடைசி ஓவருக்கு 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. முதல் பந்தில் அஷூடோஷ் ஆட்டமிழந்தாலும் ஷஷாங்க் கடைசிக்கு முந்தையை பந்தில் ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார். இதன்மூலம், 1 பந்து மீதம் இருக்க 200 ரன்களை சேஸ் செய்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஷஷாங்க் சிங் தேர்வானார். ஷஷாங்க் சிங் 29 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 41 ரன்களையும், அஷூடோஷ் சர்மா 17 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்கள் என 31 ரன்களையும் சேர்த்தனர்.   

6 /7

இன்றைய போட்டியை வென்று கொடுத்த ஷஷாங்க் சிங், கடந்த ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்டபோது சற்று குழப்பம் இருந்தது. ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் துணை உரிமையாளர்களான பிரீத்தி ஷிண்டா மற்றும் நெஸ் வாடியா ஆகியோர் இந்திய இளம் வீரர் ஷஷாங்க் சிங்கை எடுத்த பின்னரும் குழப்பத்துடன் காணப்பட்டனர். முதலில் இந்த ஷஷாங்க் சிங்கை எடுக்க பஞ்சாப் அணி நினைக்கவில்லை, ஆனால் நேரம் கடந்துவிட்டது. வேறொரு ஷஷாங்க் சிங்கை எடுப்பதற்கு பதில் இந்த வீரரை அவர்கள் எடுத்துவிட்டனர். இருப்பினும், அவர் ஏலத்தில் எடுத்த ஷஷாங்க் சிங்கையே எடுத்துக்கொள்வதாக கூறினர்.   

7 /7

இதுகுறித்து ஏலம் முடிந்த உடன் பஞ்சாப் கிங்ஸ் அதன் X தளத்தில்,"ஷஷாங்க் சிங் எப்போதும் எங்களின் பட்டியலில் இருந்தார் என்பதை பஞ்சாப் கிங்ஸ் தெளிவுபடுத்த விரும்புகிறது. ஒரே பெயரில் 2 வீரர்கள் பட்டியலில் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. அவரை அணியில் வைத்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் அவர் எங்கள் வெற்றிக்கு பங்களிப்பார் என நம்புகிறோம்" என ஷஷாங்க் சிங்கை வரவேற்றது குறிப்பிடத்தக்கது.