இந்தியாவை அலறவிட காத்திருக்கும் 3 ஆப்கன் வீரர்கள்... சமாளிக்கும் ரோஹித் & கோ!

IND vs AFG: 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கு தலைவலியை தரக்கூடிய மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்கள் குறித்து இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 9, 2024, 08:18 PM IST
  • முதல் போட்டியில் ரஷித் கான் விளையாடுவது சந்தேகம்.
  • உலகத் தர சுழற்பந்துவீச்சாளர்களை ஆப்கானிஸ்தான் வைத்துள்ளது.
  • நாளை மறுநாள் இந்த டி20 தொடர் தொடங்க உள்ளது.
இந்தியாவை அலறவிட காத்திருக்கும் 3 ஆப்கன் வீரர்கள்... சமாளிக்கும் ரோஹித் & கோ! title=

IND vs AFG Updates In Tamil: வரும் ஜூன் மாதத்தில் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரை எதிர்நோக்கி மொத்த கிரிக்கெட் உலகமே இருக்கிறது. ஒவ்வொரு நாடும் தனது டி20 அணியை சீராக்கி, உலகக் கோப்பையை கைப்பற்றும் முனைப்போடு உள்ளது. மொத்தம் 20 அணிகள் உலகக் கோப்பையில் கடுமையான மோதலை மேற்கொள்ள உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது நினைவுக்கூரத்தக்கது. 

இந்திய அணியை (Team India) பொறுத்தவரை கடந்தாண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பின் அணியில் சில மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. ஓடிஐ உலகக் கோப்பைக்கு பின் வரும் டி20 உலகக் கோப்பை வரை மொத்தம் 11 டி20 போட்டிகளில் இந்தியா விளையாட இருந்தது. அதில், 5 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்றது. இதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டார்.  

தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவானது. முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணியின் கடைசி டி20 தொடராக தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் (IND vs AFG T20 Series) அமைந்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. 

மேலும் படிக்க | இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்... இந்த பிஸ்தா பிளேயர்களுக்கும் இடம் கிடையாது!

ஆப்கானிஸ்தான் அணிதானே என்று நம்மால் யோசிக்கவே முடியாத அளவிற்கு அந்த அணி தற்போது வளர்ந்து நிற்கிறது. ஐபிஎல் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள டி20 லீக்கில் ஆப்கான் வீரர்களின் ஆதிக்கத்தை நம்மால் பார்க்க முடிகிறது. நடந்த முடிந்த ஓடிஐ உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி ஆறாவது இடத்தில் நிறைவு செய்தது. அரையிறுதி ரேஸிலும் கடுமையான போட்டியிட்டது.

அந்த வகையில், இந்திய அணிக்கு கடும் போட்டிகளிக்கும் வகையில் தற்போதைய ஆப்கன் அணி வளர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் இந்திய அணிக்கு தலைவலி கொடுக்கக்கூடிய ஆப்கன் வீரர்கள் யார் யார் என்பதை இதில் காணலாம். ரஷித் கான் (Rashid Khan) மட்டுமின்றி இந்த மூன்று வீரர்களும் இந்திய அணிக்கு தொந்தரவளிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். 

1. கைஸ் அகமது

2018 U-19 ஓடிஐ உலகக் கோப்பையில் லெக்-ஸ்பின்னரான கைஸ் அகமது (Qais Ahmed) பலரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த தொடரில் அவர் 12.50 சராசரியில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். The Hundred, பிக்பாஸ் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் போன்ற டி20 தொடர்களில் விளையாடி வருகிறார். கூக்ளியால் பேட்டரை திக்குமுக்காட வைப்பது இவரின் தனித்திறமையாகும். விராட் கோலி உள்ளிட்ட மிடில் ஆர்டர் பேட்டர்கள் இவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முதல் போட்டியில் ரஷித் கான் விளையாட மாட்டார் என கூறப்படும் நிலையில், 23 வயதான கைஸ் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. நஜிபுல்லா ஷத்ரான்

ஆப்கானிஸ்தான் அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வருபவர் நஜிபுல்லா ஷத்ரான் (Najibullah Zadran). ஆனால், இவர் இதுவரை ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவே இல்லை. இருப்பினும், அது ஒரு பிரச்னை இல்லை. அவரால் பெரிய அளவில் சிக்ஸர்களை பறக்கவிடும் திறன் உள்ளது. இந்தியாவில் அதுவும் டி20களில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். சுமார் இந்தியாவில் விளையாடிய டி20 போட்டிகளில் 300 ரன்களை 33.33 சராசரியில், 137.53 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார். 30 வயதான இவர் ஓடிஐ உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடாததால் அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆனால், டி20இல் பினிஷராக நல்ல அனுபவம் உள்ளதால் அவரும் இந்திய பந்துவீச்சு படைக்கு தலைவலியை கொடுப்பார். 

3. ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய்

சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு தனிநபராக அதிகபட்ச ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் ஜஸாய் (Hazratullah Zazai) இரண்டாவது இடத்தில் உள்ளார். 2019இல் டேராடூனில் நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிரான 62 பந்துகளில் 162 ரன்களை ஜஸாய் குவித்தார். இவருக்கும் இந்தியாவில் நல்ல அனுபவம் உள்ளது. வலுவான வீரரான ஜஸாய் சிக்ஸர்களை விளாசுவதில் கில்லாடி. ஓப்பனிங்கில் களமிறங்கி பவர்பிளேவில் ரன்களை குவிப்பர். அந்த வகையில் பெரிதும் அனுபவமற்ற இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை ஜஸாய் கிழித்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | அரசியலில் இருந்து அம்பதி ராயுடு விலக மும்பை இந்தியன்ஸ் தான் காரணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News