ஓர் ‘எதிர்க்கட்சியாக’ அதிமுகவிடம் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது என்ன ?!

Opposition Party ADMK :   அதிமுகவின் சரிவை, தமிழகத்தின் மற்ற கட்சிகள் கொண்டாட முடியாத நிலையை எந்தப் புள்ளியில் வைத்துப் புரிந்துகொள்வது. கடற்கரையின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக குறித்து கலைஞர் கருணாநிதி கூறியது என்ன ?   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Aug 12, 2022, 09:02 PM IST
  • திமுக இல்லையென்றால் ஒரே ஆறுதல் எனக்கு அதிமுகதான் - கருணாநிதி
  • எதிர்க்கட்சி அந்தஸ்தில் முறையாக செயல்படுகிறதா அதிமுக ?
  • திராவிடக் கட்சியில் ஒன்று சரிவது தமிழகத்திற்கு நல்லதா ?
ஓர் ‘எதிர்க்கட்சியாக’ அதிமுகவிடம் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது என்ன ?! title=

அதிமுகவில் எப்போதும் உச்சரிக்கப்படும் வாசகம் ஒன்றுண்டு. ‘ஒன்றரைக் கோடி தொண்டர்கள்’ என்ற பிரம்மாண்ட வாசகம்தான் அது. இதற்காகத்தான் எல்லாம். இப்போது ஒற்றைத் தலைமைக்காக மோதும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோருக்கு இருக்கும் ஒரே கேள்வி, ஓன்றரைக் கோடி தொண்டர்களும் யார் பக்கம் என்பதுதான்? பொதுக்குழு உறுப்பினர்களை எப்படியேனும் கவர்ந்து இழுக்கும் உத்திகளையும், அரசியல் களேபரங்களையும் விட்டுவிடலாம். ஆனால், அதிமுகவின் அசைக்கவே முடியாத சொத்தாக உள்ள இந்த தொண்டர்களை கவர்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல தானே!?

அதனால், உட்கட்சி களேபரங்களைத் தாண்டி தொண்டர்களை நோக்கி இ.பி.எஸ்ஸும், ஓ.பி.எஸ்ஸும் படையெடுத்துச் செல்கின்றனர். ஒ.பி.எஸ் ஒரு பக்கம் தொண்டர்களைச் சந்திக்கச் சென்ற நிலையில், அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளரான இ.பி.எஸ், தற்போது தொண்டர்களைச் சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

மேலும் படிக்க | இ.பி.எஸ், ஓ.பி.எஸ் பிரிவு, அண்ணன் - தம்பி பிரிவு போலத்தான் - செல்லூர் ராஜூ ஃபீலிங்ஸ்!

சென்னையில் இருந்து சேலம் நோக்கி புறப்பட்ட அவரது சுற்றுப்பயணம் காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி என வழிநெடுகிலும் தொண்டர்களைச் சந்தித்து தமிழகத்தின் அரசியல் குறித்துப் பேசி வருகிறார். தொடர்ந்து, அனைத்து இடங்களிலும் திமுகவை விமர்சித்தே அவரது பேச்சின் சாராம்சம் இருந்தது. 

Admk Party

மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் தனக்கான ஆதரவு அதிகம் இருப்பதாகக் கருதும் எடப்பாடி பழனிசாமி, அப்பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வந்துள்ளார். தென் மாவட்டங்களில் இன்னும் பலம் பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நினைப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், தென்மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்காக ஆர்.பி.உதயகுமார் தொடர்ந்து அதற்கானப் பணிகளைச் செய்து வருகிறார்.

Admk Party

இதனிடையே, அதிமுகவின் பொதுக்குழு வழக்கின் தீர்ப்பும் நெருங்கி வருவதால் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், சுதந்திர தினத்திற்காக இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை தள்ளிப்போட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, பின்னர் திருச்சியில் துவங்கி தென்மாவட்டங்களை நோக்கி தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கிய பெரும்பாலான நபர்கள் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என்று சட்டரீதியாக புகார் மனு ஒன்று அவரது சார்பில் காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது. 

Admk Party

சேலத்தைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் சென்னை டி.ஜி.பியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள் சுற்றுப்பயணத்தின் போது அசம்பாவிதங்களில் ஈடுபடுவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதனால் எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கே ஆபத்து இருப்பதால் உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஓ.பி. ரவீந்திரநாத் எப்போது அதிமுக எம்.பியாக இருந்தார்?... கேள்வி எழுப்பிய ராஜன் செல்லப்பா

தொண்டர்களைச் சந்திக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் நோக்கம் உட்கட்சிப் பிரச்சனையாக பார்க்கும்போது சரியாக இருந்தாலும், தமிழக மக்களுக்கு அதில் என்ன பயன் ?. திமுக ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே அதிமுகவில் உட்கட்சிப் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து ராயப்பேட்டை அலுவலகத்தில் உள்ள கூட்டம் முடிந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த ஒரு பேட்டியில் இருந்து பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது. 

Admk Party

இ.பி.எஸ் கோஷ்டி, ஓ.பி.எஸ் கோஷ்டி, வானகரம் பொதுக்குழு, பண விநியோக பேரம் தொடர்பான ஆடியோக்கள், மிரட்டல் ஆடியோக்கள், நீதிமன்ற விசாரணைகள், வழக்குகள், பேச்சுவார்த்தைகள் என்றே அதிமுகவின் கவனங்கள் இருந்தன. ஆரோக்கியமான எதிர்கட்சியாக செயல்பட வேண்டிய ஒரு கட்சி இப்படியிருப்பது, தமிழக மக்களை மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாக தமிழகத்தின் பிற அரசியல் கட்சிகளுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

ஒருகட்டத்தில் அதிமுகவின் இந்த சரிவும், பாஜகவின் தலையீடுகளும் தமிழக அரசியலுக்கு நல்லதல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திருமாவளவன் வெளிப்படையாகவே தனது விரக்தியைத் தெரிவித்தார். இன்னபிற கட்சிகளின் தலைவர்களும்கூட இதே சாராம்சக் கருத்துக்களையே கூறி வருகின்றனர். 

அதிமுகவின் சரிவை, மற்ற கட்சிகள் கொண்டாட முடியாத நிலையை எந்தப் புள்ளியில் வைத்துப் புரிந்துகொள்வது. இதற்கு இரண்டு உதாரணங்கள் இந்திய அரசியலில் அரங்கேறின. மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையில் முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அக்கட்சியின் மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்தார். 

Admk Party

இதுபோதாதென்று, தற்போது சிவசேனா கட்சிக்கும் உரிமைக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். அதற்கு உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்தக் காட்சிகள் அரங்கேறிய சில நாட்களிலேயே பீகாரில் வேறொருத் திருப்பம் நடந்தது. 

பீகார் மாநில முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார், பாஜகவுடனான கருத்து வேறுபாடு முற்றியதை அடுத்து அந்தக் கூட்டணியில் இருந்து விலகினார். ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த அடுத்த ஒரு மணி நேரத்தில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 

மேலும் படிக்க | அதிமுகவில் அடுத்த பஞ்சாயத்து... சீரியஸா எடுத்துக்காதீங்க என்று ஜெயக்குமார் விளக்கம்

இந்த இரண்டு சம்பவங்களில் இருந்தும் அதிமுக கற்றுக்கொள்வதற்கு பெரும் பாடம் ஒன்றுண்டு. அண்ணாவின் பெயரைத் தாங்கிக் கொண்டுள்ள அந்தக் கட்சி, பாஜகவின் தலையீடுகளை ஏற்றுக்கொள்வது அந்தக் கட்சிக்கு மட்டுமல்லாமல் பிற கட்சிகளின் தலைவர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் எமர்ஜென்சி காலத்தில் மாநிலக் கட்சிகளுக்கு ஓர் அச்சுறுத்தல் இருந்துகொண்டிருந்த காலமது. எந்த நேரத்திலும் திமுக தடை செய்யப்படலாம் என்ற நெருக்கடி இருந்தது.

Admk Party

இதுகுறித்து, கடற்கரையில் திமுகவின் முக்கியமான தலைவர்கள் கருணாநிதியோடு ஆலோசனையில் ஈடுபட்டிருந்த போது, ‘ஒருவேளை கட்சியை முழுமையாக தடை செய்துவிட்டால் என்ன செய்வது’ என்ற கேள்வி யதேச்சையாக கருணாநிதியிடம் கேட்கப்படுகிறது. 

அப்போது கருணாநிதி சொன்ன பதில் இதுதான், ‘திமுக இல்லாவிட்டால் எனக்கு ஒரே ஆறுதல் அதிமுகதான். திமுக, அண்ணா தொடங்கிய கட்சி. அதில் அண்ணாவின் உயிர் இருக்கிறது. எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுகவில் அண்ணாவும் இருக்கிறார், திமுகவும் இருக்கிறது. அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக முடக்கப்பட்டாலும், அண்ணாவின் பெயரில் உருவாக்கப்பட்ட அதிமுக நம்மைக் கொஞ்சமேனும் பிரதிபலிக்கும். நிச்சயமாக தேசியக் கட்சிகளைப் போல அதிமுகவினர் தமிழ்நாட்டுக்கு அந்நியமாகச் செயல்பட மாட்டார்கள்!”

Admk Party

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து எதிரகட்சியாக செயல்பட வேண்டிய அதிமுக தொடர்ந்து உட்கட்சிப் பிரச்சனையில் மூழ்கிக் கொண்டிருக்க, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து ஊடக வெளிச்சங்களில் இருந்துகொண்டிருந்தார். ஒருகட்டத்தில் தமிழகத்தின் எதிர்கட்சி நாங்கள்தான் என அண்ணாமலை பகிரங்கமாக அறிவிக்க, பிரச்சனையை அப்போதுதான் உணர்ந்த அதிமுக முதல்முறையாக எதிர்கட்சி யார் என்பது குறித்து பொதுவெளியில் கருத்துத் தெரிவித்தது. 

Admk Party

‘ஏதோ ஒரு நூறு பேரை, ஆயிரம் பேரைக் கூட்டி ஒரு போராட்டத்தை நடத்துவதால் மட்டும் ஒரு கட்சி பிரதான எதிர்க்கட்சியாக மாற முடியாது, வளரவும் முடியாது. எதிர்கட்சி அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் போராடினால் மட்டும் போதாது, கட்சிக்கென்று கொள்கைகள் இருக்க வேண்டும்’ என்று பகிரங்கமாக ஒருபோடு போட்டார் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன். பின்னர், இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி தொடர்ந்து சர்ச்சையில் இருக்கிறது. பாஜகவும் தங்களது இருப்பைக் காட்டிக்கொள்ள பல ‘ஸ்டண்ட்டுகளை’ செய்து வருகிறது. 

மேலும் படிக்க | எனது தலைமையில் அதிமுக ஒன்றாகும் - சசிகலா உறுதி

ஆளும் அரசின் குறைகளையும், பிரச்சனைகளையும் மக்கள் சார்பாக சட்டப்பேரவையிலும், போராட்டக்களத்திலும் எடுத்துரைக்கவே எதிர்கட்சி அந்தஸ்தை அதிமுகவுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். ஆனால், அதிமுக என்ன செய்துகொண்டிருக்கிறது என்பது அக்கட்சியினருக்கே வெளிச்சம்.

Admk Party

தற்போது தொண்டர்களைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி தென்மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். உட்கட்சி ரீதியாக இதில் அவருக்கு வெற்றி கிடைக்குமா என்பதைத் தாண்டி, தமிழகத்தின் அரசியல் பொதுநீரோட்டத்தில் அதிமுக பங்கேற்பது எப்போது என்பதே தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாக இருக்கிறது.! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News